மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா (கே.வி.எஸ்.) பள்ளிகளில், வரும் 2026-27-ம் கல்வியாண்டு முதல் மும்மொழிக் கொள்கையின் கீழ் 6 மற்றும் 9-ம் வகுப்புகளில் குறைந்தபட்சம் ஒரு ‘சமஸ்கிருத பிரிவு’ கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் 3-வது மொழியைத் தேர்ந்தெடுப்பது குறித்த கருத்துக்கேட்புப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.
புதிய வழிகாட்டுதலின்படி, ஒரே மொழியைத் தேர்வு செய்யும் மாணவர்கள் தனிப்பிரிவாகப் பிரிக்கப்படுவார்கள் என்றும், ஒரு குறிப்பிட்ட மொழியைப் படிக்கக் குறைந்தது 15 மாணவர்கள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சமஸ்கிருதம் மற்றும் வட்டார மொழிப் பிரிவுகளைப் பள்ளி முதல்வர்கள் தீர்மானிக்கலாம் என்றாலும், அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாக ஒரு சமஸ்கிருத பிரிவு இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் மாற்றம் குறித்து கேந்திரிய வித்யாலயா சங்கதனின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், “மாணவர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப சமஸ்கிருதம் அல்லது அவர்களின் வட்டார மொழியைத் தாராளமாகத் தேர்வு செய்து கொள்ளலாம்; இதில் எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால், மத்திய அரசு ஊழியர்கள் அடிக்கடி மாநிலம் விட்டு மாநிலம் பணி இடமாற்றம் செய்யப்படுபவர்கள் என்பதால், அவர்களின் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது. இந்தியாவின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அவர்களுக்குத் தொடர்ச்சியாகக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற ஒரே நல்ல நோக்கத்திற்காகவே, ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் ஒரு சமஸ்கிருத பிரிவு இருக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
