ஆபரேஷன் சிந்தூரின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, பாகிஸ்தான் அரசியல் தலைவர் ஷாஹீர் சியால்வி வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் இராணுவம் ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளுக்காகவே போரிடுவதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை, பாகிஸ்தான் அரசு “சுதந்திரப் போராட்ட வீரர்கள்” என்று சித்தரிக்க முயன்றதாகவும், அவர்களுக்கு இராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டதாகவும் அவர் உண்மையை உடைத்துள்ளார்.

பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த அறிக்கை, இந்தியாவின் நீண்டகாலக் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்த்துள்ளது.

பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, கடந்த ஆண்டு மே 7-ம் தேதி இந்திய இராணுவம் ‘ஆபரேஷன் சிந்துர்’ மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் இருந்த பயங்கரவாத மறைவிடங்களை அழித்தது.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தனது உத்தியை மாற்றி, பயங்கரவாதிகளைப் பாதுகாக்கப் புதிய வழிகளைக் கையாண்டு வருவதாக சியால்வி குறிப்பிட்டுள்ளார்.

ஐநா சபையால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டவர்கள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே இத்தகைய கருத்துக்கள் வெளிவந்துள்ளது, பாகிஸ்தானின் இரட்டை வேடத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளதோடு, சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்குப் புதிய நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.