ஜோர்டான் நாட்டின் குயின் அலியா விமான நிலையத்தில் கடந்த நான்கு மாதங்களாகத் தவித்த நான்கு பாலஸ்தீனியக் குழந்தைகள், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத்தின் அதிரடி நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளின் தந்தை ஈத் சுலைமான் அல் அப்பாஸி, தனது பிள்ளைகளை ஜோர்டானில் புதிய வாழ்க்கையைத் தொடங்க அனுப்பி வைத்தார். ஆனால், ஆவணங்களில் ஏற்பட்ட பிழை மற்றும் குழந்தைகளின் அமீரக விசாக்கள் ரத்து செய்யப்பட்டதால், அவர்களால் ஜோர்டானுக்குள் நுழையவோ அல்லது மீண்டும் அமீரகத்திற்கோ திரும்ப முடியாமல் விமான நிலையத்திலேயே சிக்கிக்கொண்டனர்.

இதனால் குழந்தைகளின் படிப்பு மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகினர். வேறு வழியின்றி, அந்தச் சிறுமிகளில் ஒருவர் ஜனாதிபதியை ‘பாபா’ என்று அழைத்து உதவி கோரிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிபரின் கவனத்திற்குச் சென்றது.

இதைக் கண்ட அதிபர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதோடு, சில மணி நேரங்களிலேயே விசா சிக்கல்களைத் தீர்த்து குழந்தைகளைத் திரும்ப அழைத்து வர வழிவகை செய்தார். ஜனாதிபதி ஏற்கனவே 2007 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் தங்களது தந்தையின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவியதை அக்குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளனர்.

“>

 

பிரிந்திருந்த பிள்ளைகள் மீண்டும் தந்தையுடன் இணைந்தது அக்குடும்பத்திற்குப் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.