ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்கம்பம் அருகே இருந்த பனை மரத்தில் நுங்கு பறிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிறுமாங்காடு கிராமத்தைச் சேர்ந்த டில்லிகணேஷ் மற்றும் தட்சணாமூர்த்தி ஆகிய இருவரும் நண்பர்கள்.
மேலும் கோடை வெப்பத்தைத் தணிக்க இன்று அப்பகுதியில் உள்ள பனை மரத்தில் ஏறி நுங்கு பறித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக நுங்கு குலை அருகில் இருந்த மின்சார வயரில் சிக்கியுள்ளது. மின்சார வயரில் சிக்கிய நுங்கை எடுக்க மாணவர்கள் முயன்றபோது, அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர், மாணவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கோடை விடுமுறையைக் கழிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சிறுமாங்காடு கிராம மக்களிடையே மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
