திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வருகை தந்தது, தற்போது பெரும் சர்ச்சையாகவும் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

“முருகப் பெருமானைத் தவிர வேறு யாருக்கும் பூரண கும்ப மரியாதை அளிக்கக் கூடாது என்பது விதியாக உள்ளபோது, விஜய்க்கு எப்படி அந்த மரியாதை வழங்கப்பட்டது?” எனக் கேள்வி எழுப்பிய அவர், வேல் கொடுப்பது இப்போது ஒரு பேஷனாக மாறிவிட்டதாகவும், பக்தர்களின் புரிதல் இன்றி வெங்கலக் கடையில் வாங்கி வருவது போல் வேல் வழங்கப்படுவதாகவும் சாடினார்.

மேலும், விஜய்யுடன் வந்த பாதுகாவலர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நிலையில், “ஆலயத்தை மனப்பூர்வமாக நம்புகிறேன்” என கடிதம் எழுதித் தந்துவிட்டுச் செல்ல வேண்டும் என்கிற உயர் நீதிமன்ற உத்தரவு முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பதையும், அந்தப் பாதுகாவலர்கள் எந்த அடிப்படையில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

கோவில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்கள் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்த ஜெயக்குமார், திருச்செந்தூர் திரிசுதந்திரர்கள் வசதியாக வாழ்வதில் எங்களுக்குப் பொறாமை இல்லை, ஆனால் ஏழை பக்தர்கள் அர்ச்சனைக்கு வரும்போது அவர்களிடம் எரிந்து விழுவதைக் கைவிட வேண்டும் என உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

“பணக்காரர்களுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதியா?” எனக் கேட்ட அவர், அர்ச்சனை முறைகள் அநாகரிகமாக மாறி வருவதையும், தேங்காய் உடைப்பதில் கூட மரபுகள் மீறப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் ஆய்வுகள் பெயரளவில் மட்டுமே இருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், கனிமொழி எம்.பி கூறியது போலத் திருப்பதிக்கு நிகராகத் திருச்செந்தூரை மாற்ற வேண்டுமானால், விஐபி கலாச்சாரத்தைக் குறைத்து சாதாரண பக்தர்களுக்கும் சமமான முன்னுரிமை வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார்.