செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் அருகே உள்ள கொளப்பாக்கத்தில், மத்திய அரசு ஓய்வுபெற்ற அதிகாரி ராஜேந்திரன் – உஷாராணி தம்பதியிடம் நேபாளத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார். வேலைக்குச் சேர்ந்த ஒரே வாரத்தில் அந்தப் பெண் கைவரிசையை காட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் பணியில் அமர்த்தப்பட்ட அந்தப் பெண், தம்பதியினர் வெளியே சென்று திரும்பிய இரவு அவர்களுக்குப் பால் கொடுத்துள்ளார்.
அந்தப் பாலை அருந்திய தம்பதியினர் அடுத்த சில நிமிடங்களிலேயே ஆழ்ந்த மயக்க நிலைக்குச் சென்றுள்ளனர். மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்து எழுந்தபோது, உஷாராணி அணிந்திருந்த நகைகள் உட்பட மொத்தம் 51 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. வீட்டின் வெளிக்கதவை பூட்டிவிட்டு அந்தப் பெண் தப்பியோடியுள்ளார்.
தகவலறிந்து வந்த கிளாம்பாக்கம் போலீசார், பூட்டை உடைத்து உள்ளே சென்று விசாரணை நடத்தினர். பாலில் மயக்க மருந்து கலந்து திட்டமிட்டு இந்தச் சதிச் செயலை அந்தப் பெண் அரங்கேற்றியது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள அந்த நேபாளப் பெண்ணைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
