சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த 42 வயதான நாகலட்சுமி, இன்ஸ்டாகிராமில் புடவை விற்பனை மூலம் மிகவும் பிரபலமான தொழிலதிபர்.
இவரது கணவர் சுப்பிரமணியன் எவ்வித வேலைக்கும் செல்லாமல் தகராறு செய்ததால், இருவரும் சில ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
தனியாகப் போராடி தனது இரு மகன்களையும் மருத்துவப் படிப்பு வரை படிக்க வைத்த நாகலட்சுமி, இன்ஸ்டாகிராம் மூலம் தொழிலிலும் பெரிய வளர்ச்சியை அடைந்தார்.
மனைவியின் இந்த வெற்றியைக் கண்டு, மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகக் கெஞ்சிக் கேட்டு, கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்துள்ளார்.
ஆனால், மீண்டும் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், நாகலட்சுமியைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.
பின்னர், கல்லூரி சென்றிருந்த தனது இரண்டாவது மகனுக்கு, “நானும் அம்மாவும் இனி இருக்க மாட்டோம், சாப்பாடு வைத்திருக்கிறேன்” என்று மெசேஜ் அனுப்பிவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டார்.
கஷ்டப்பட்டு முன்னேறிய ஒரு பெண், பிரிந்து சென்ற கணவனை நம்பிச் சேர்த்த பத்தே நாட்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
