இலங்கையின் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 1.1 பில்லியன் ரூபாய் மதிப்பிலான உயர்தர கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 22 புத்த துறவிகள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தின் பேங்காக் நகருக்கு நான்கு நாள் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு திரும்பிய துறவிகள் குழுவினரின் உடைமைகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவர்களின் டிராலி பேக்குகளின் எடை மற்றும் அமைப்பில் சந்தேகம் ஏற்பட்டது. விரிவான சோதனையில், பேக்குகளுக்குள் ரகசிய அறைகள்  அமைக்கப்பட்டு, அதில் 110 கிலோ ‘ஹை-கிரேடு’ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு துறவியின்  பேக்கிலும் தலா 5 கிலோ போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பயிற்சி துறவிகள் ஆவர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஒரு மாஸ்டர்மைண்ட் செயல்பட்டதும், அவர் இந்தப் பயணத்திற்கான முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டதும் தெரியவந்துள்ளது. பேக்குகளில் இருப்பது ‘தானம்’ வழங்குவதற்கான பொருட்கள் என்று கூறி அந்த துறவிகள் ஏமாற்றப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக 23-வது நபராக ஒரு துறவியும்  கைது செய்யப்பட்டுள்ளார். இது இலங்கை விமான நிலைய வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை எனக் கருதப்படுகிறது.