மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான எரிபொருள் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு பெட்ரோலியத் துறை அமைச்சர் முசாதிக்கின் கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பாகிஸ்தான் பெட்ரோலியத் துறை அமைச்சர் முசாதிக்கின் சமீபத்திய நேர்காணலில், பாகிஸ்தானின் பலவீனமான நிலையை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கூறியதாவது:ன,

“பாகிஸ்தானிடம் தற்போது அவசரகாலத் தேவைக்கான ‘மூலோபாய பெட்ரோலிய இருப்பு’ (Strategic Petroleum Reserve) எதுவுமில்லை. தற்போதைய நிலையில், அரசிடம் வெறும் 5 முதல் 7 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மட்டுமே உள்ளது. எண்ணெய் நிறுவனங்களிடம் 20 நாட்கள் வரை தேவையான இருப்பு உள்ளது.

நாடு ஏற்கனவே பெரும் கடன் சுமையில் இருப்பதால், அதிக செலவு செய்து எரிபொருளைச் சேமித்து வைக்கும் பொருளாதார பலம் பாகிஸ்தானுக்கு இல்லை என்பதையும் அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

இந்த இக்கட்டான சூழலில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக் கொள்கையை முசாதிக்கின் வெகுவாகப் பாராட்டினார். “இந்தியா வருங்கால நெருக்கடிகளைக் கணக்கில் கொண்டு 53 லட்சம் மெட்ரிக் டன் (சுமார் 3.69 கோடி பேரல்) எரிபொருளை நிலத்தடி சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைத்துள்ளது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மிகவும் வலுவாக உள்ளது. ஒரு நெருக்கடி காலத்தில், அரசின் ஒரே ஒரு கையெழுத்து மூலம் அந்த சேமிப்பை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும். ஆனால், பாகிஸ்தானின் திட்டமிடல் இந்தியாவின் முன்னால் பூஜ்ஜியமாக உள்ளது” என்று அவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு வர வேண்டிய பல எண்ணெய் கப்பல்கள் அங்கேயே முடங்கியுள்ளன. இது பாகிஸ்தான் சந்தையில் பெட்ரோல், டீசல் விலையை மேலும் உயர்த்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷாபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு தற்போது 90 நாட்களுக்குத் தேவையான எரிபொருளைச் சேமிக்கத் திட்டமிட்டு வருகிறது. இருப்பினும், காலியாக உள்ள அரசு கஜானா மற்றும் பொருளாதாரச் சரிவு காரணமாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பெரும் சவால்கள் நீடிக்கின்றன.