தைரியம் மற்றும் மனவலிமை பற்றிப் பலவாறு பேசப்பட்டாலும், வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணங்களில் சில நேரங்களில் வீரர்களின் கால்களும் தடுமாறிவிடுகின்றன. பிரேசில் நாட்டின் கிரிகியூமா பகுதியில், தனது இரண்டாவது குழந்தை பிறந்த தருணத்தில் தந்தை ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி, கிரிகியூமாவைச் சேர்ந்த மேகோன் பெட்ரோசோ என்பவரின் மனைவி மரியான் பெலிப் என்பவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. தனது மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு அவருக்குத் தைரியம் கூறுவதற்காக மேகோன் அறுவை சிகிச்சை அறையிலேயே இருந்தார். எல்லாம் சாதாரணமாகவே போய்க் கொண்டிருந்தது.
ஆனால், மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுத்து மேகோனிடம் காட்டிய அந்த நொடியில், அவருக்குக் கண்கள் இருண்டன. மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற அவர், நிலைதடுமாறி அப்படியே தரையில் சாய்ந்தார்.
பிறந்த குழந்தையைக் கவனிப்பதை விட, மயங்கி விழுந்த தந்தையைக் கவனிப்பதே மருத்துவர்களுக்குப் பெரும் சவாலாகப் போய்விட்டது. அங்கிருந்த செவிலியர்கள் துரிதமாகச் செயல்பட்டு, அவர் கீழே விழும் முன்பே தாங்கிப் பிடித்தனர். பின்னர் அவரது கால்களை உயர்த்திப் பிடித்து, அவருக்கு முதலுதவி அளித்து சுயநினைவுக்குக் கொண்டு வந்தனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கேமராவில் பதிவாகின.
இதுகுறித்து பின்னர் மேகோன் கூறுகையில், “என் மகள் பிறந்த அந்த நிமிடம் எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை. திடீரென்று எல்லாம் மங்கலாகிவிட்டது,” என்று சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.
அங்கு பணியாற்றிய புகைப்படக் கலைஞர்கள் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளில் 1,500-க்கும் மேற்பட்ட பிரசவங்களை எடுத்துள்ளதாகவும், தந்தையர்கள் இதுபோல மயங்கி விழுவது இது முதல் முறையல்ல என்றும் குறிப்பிட்டனர்.
அதித மகிழ்ச்சி மற்றும் ரத்தத்தைப் பார்க்கும் போது ஏற்படும் பதற்றம் காரணமாக ரத்த அழுத்தம் குறைந்து இது போன்ற மயக்கம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது மேகோன் மற்றும் அவரது குடும்பத்தினர் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.
தந்தையின் இந்த ‘கியூட்’ வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, அவர் தனது மகள் வளர்ந்த பிறகு இதைக் காட்டி நிச்சயம் சிரிப்பார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
