ஒடிசா மாநிலம் கியோஞ்சார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஜீது முண்டா என்ற பழங்குடியின நபர், தனது மறைந்த சகோதரியின் எலும்புக்கூட்டை ஒரு சாக்குப்பையில் சுமந்து கொண்டு வங்கிக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தனது சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்த 20,000 ரூபாய் பணத்தை எடுப்பதற்காக அவர் பலமுறை வங்கிக்குச் சென்றுள்ளார். ஆனால், ஒவ்வொரு முறையும் “கணக்கு வைத்திருப்பவரை நேரில் அழைத்து வாருங்கள்” என்று வங்கி அதிகாரிகள் கூறியதாகத் தெரிகிறது.

சகோதரி இறந்துவிட்டதாக அவர் கூறியும் அதிகாரிகள் நம்பாததால், விரக்தியடைந்த அவர் புதைக்கப்பட்ட தனது சகோதரியின் உடலைத் தோண்டி எடுத்து, அதன் எலும்புக்கூட்டை வங்கிக்கு ஆதாரமாகக் கொண்டு வந்துள்ளார்.
​இந்தச் சம்பவம் இந்திய வங்கித்துறையின் மோசமான கட்டமைப்பையும், ஏழை மக்களுக்கு நடைமுறைகளை விளக்கத் தவறிய அதிகாரிகளின் அலட்சியத்தையும் காட்டுவதாகக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஒரு பாமர மனிதனை இவ்வளவு தூரம் அலைக்கழித்து, அவனை எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு வரவழைத்த சூழல் நாட்டுக்கே அவமானம் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.