பெங்களூருவின் ஆடுகோடி பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 34 வயது இளம்பெண் பூஜா தத்தா என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தங்கியிருந்த வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.
அந்த அறையிலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாக அக்கம் பக்கத்தினர் உரிமையாளருக்குத் தகவல் கொடுத்தனர். கதவை உடைத்துப் பார்த்தபோது, பூஜா ஆடைகளின்றி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
அவர் உயிரிழந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் எனத் தெரிகிறது. அந்த அறையில் டேபிள் ஃபேன் ஓடிக்கொண்டிருக்க, காகிதங்கள் சிதறிக் கிடந்துள்ளன. அடிக்கடி அந்தப் பெண்ணின் வீட்டுக்கு ஒரு ஆண் வந்து செல்வது வழக்கமென்றும், இருவருக்கும் இடையே சண்டைகள் நடப்பதால் வீட்டை காலி செய்யச் சொல்லியிருந்ததாகவும் வீட்டு உரிமையாளர் தரப்பில் கூறப்படுகிறது.
தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், உடற்கூறாய்வு முடிவுக்குப் பிறகே உண்மை நிலவரம் தெரியவரும்.
