தென்காசி மாவட்டம் கடையம் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்து 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடையம் ஒன்றியம் மயிலப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவரது மகன் பொன்செல்வன் நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஊருக்கு வெளியே உள்ள பனை மரத்தில் கிளிகளைப் பிடிப்பதற்காக ஏறியுள்ளார்.
மேலும் எதிர்பாராதவிதமாக, அவர் ஏறிய பனைமரம் காய்ந்த நிலையில் இருந்ததால் திடீரென முறிந்து விழுந்தது. இதில் மரத்தோடு கீழே விழுந்த பொன்செல்வன் மீது அதே மரம் விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார். காயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மகனின் உடலைப் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது. இச்சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
