பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகமாக இருந்த ராகவ் சத்தா, தற்போது அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். அவருடன் மேலும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களும் பாஜகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.

மேலும் முன்னதாக, பாஜகவுடன் நெருக்கம் காட்டியதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அதிரடி மாற்றத்தை அவர் நிகழ்த்தியுள்ளார். மாநிலங்களவையில் தனது அரசியல் பலத்தை நிரூபித்த ராகவ் சத்தா, அடுத்த கட்டமாக பஞ்சாப்பில் உள்ள ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

இதனால் பஞ்சாப் சட்டசபையில் 92 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சியிலிருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைத் தன் பக்கம் இழுக்க அவர் திட்டமிட்டு வருகிறார். கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்க, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களைத் திரட்டும் இந்த யுக்தி வெற்றி பெற்றால், பஞ்சாப் அரசியல் களம் மீண்டும் ஒரு பெரிய மாற்றத்தைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.