ஒடிசா மாநிலத்தில் மாணவர்களுக்கு விபரீதமான முறையில் தண்டனை வழங்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜாஜ்பூர் மாவட்டம், காளியபானி சாருப்பியா பள்ளியில் கடந்த 17-ஆம் தேதி மாணவர்கள் செய்த சிறு தவறுக்காக, தலைமை ஆசிரியர் வாசுதேவ் தேக்கிரி அவர்களுக்குக் கடுமையான தண்டனை அளித்துள்ளார்.

மேலும் ‘தேள் கொடுக்கு’ எனப்படும் விஷத்தன்மை கொண்ட செடியின் கிளைகளைப் பறித்து, சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பேண்ட்டுக்குள் அவர் கட்டாயப்படுத்தி திணித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் செயலால் மாணவர்களின் உடல் முழுவதும் கடுமையான அரிப்பு மற்றும் தடிப்பு ஏற்பட்டு, அவர்கள் வலியால் துடித்துள்ளனர். இச்சம்பவத்தை அறிந்த ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பள்ளி வாசலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கடிதம் அளித்த போதிலும், இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாவட்டக் கல்வி நிர்வாகம் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் வாசுதேவ் தேக்கிரியை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.