இந்தியாவில் மாற்று வழிகளில் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் மக்கள் கில்லாடிகள். ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, ஜூகாட்டின் உச்சக்கட்டத்திற்கே நம்மை அழைத்துச் சென்றுள்ளது. ஒரு காரின் கதவுப் பகுதியில் ஏற்பட்ட சேதத்தை மெக்கானிக்கிடம் கொண்டு செல்வதற்குப் பதிலாக, அந்த நபர் ஒரு கட்டிட மேஸ்திரியைக் கூட்டி வந்து அதைச் சரி செய்துள்ளார்.

 

அந்த வீடியோவில், காரின் சேதமடைந்த பகுதிக்கு அருகே கற்களை அடுக்கி, அதன் மேல் சிமெண்ட் கலவையைப் பூசி, ஒரு சுவரை எழுப்புவது போல காரை பிளாஸ்டரிங் செய்கிறார் அந்த நபர். “ஷோரூமில் ரிப்பேர் செய்ய அதிக பணம் கேட்டதால், 200 ரூபாய் கொடுத்து மேஸ்திரியைக் கொண்டு வேலையை முடித்துவிட்டேன்” என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.

“இது கார் மெக்கானிசம் இல்லப்பா.. சிவில் இன்ஜினியரிங்!” என்றும், “இனிமேல் காருக்குப் பெயிண்ட் அடிக்க வேண்டாம், சுண்ணாம்பு அடிச்சா போதும்” என்றும் நெட்டிசன்கள் இந்த வினோத கைவேலையைத் தங்களது பாணியில் கிண்டல் செய்து வருகின்றனர்.