பீகார் மாநிலம் பகஹாவில் உள்ள நௌரங்கியா கிராமத்தில் ஆண்டுதோறும் சீதா நவமி அன்று ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறுகிறது. அன்று சூரிய உதயத்திற்கு முன்பே கிராம மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு, ஊரை விட்டு வெளியேறி அருகிலுள்ள வால்மீகி புலிகள் காப்பகக் காட்டுப் பகுதிக்குச் சென்று விடுகின்றனர்.
12 மணிநேரம் நீடிக்கும் இந்த ‘கூட்டு வனவாசத்தின்’ போது, கிராம எல்லைக்குள் ஒரு நபர் கூட இருக்க மாட்டார்கள். மாலை சூரியன் மறைந்த பிறகே மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள். பல தசாப்தங்களுக்கு முன்பு, இந்தக் கிராமத்தில் காலரா மற்றும் அம்மை போன்ற நோய்கள் பரவி மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தபோது, ஒரு சித்தர் கொடுத்த ஆலோசனையின் பேரிலேயே இந்த வழிபாடு தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை ஊரை காலி செய்துவிட்டு வனதேவியை வணங்கினால் ஊருக்கு எந்தப் பாதிப்பும் வராது என்பது இவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. காட்டில் உள்ள ‘பஜனி குட்டி’ என்ற இடத்தில் அனைவரும் கூடி வனதேவிக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து, அங்கேயே உணவு சமைத்து உண்டு மகிழ்கின்றனர். இன்றைய நவீன கால இளைஞர்களும் இந்தப் பாரம்பரியத்தைப் பெருமையுடன் கடைபிடிப்பதுதான் இந்த ஊரின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும்.
