பிஹார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தின் ஷாபூர் பகுதியில் 95 வயதான கௌசல்யா தேவி என்ற முதியவர் காலமானார். அவர் இறப்பதற்கு முன்னால் ஒரு உருக்கமான ஆசையைத் தெரிவித்திருந்தார்.

“நான் 80 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீட்டிற்கு மருமகளாக வரும்போது எவ்வளவு பிரம்மாண்டமான மேளதாளங்களுடன் வந்தேனோ, அதேபோலவே நான் இந்த உலகை விட்டுச் செல்லும்போதும் இருக்க வேண்டும்” என்பதுதான் அவரது கடைசி ஆசை.

 

தனது பாட்டியின் கடைசி ஆசையை நிறைவேற்றத் துடித்த அவரது 6 பேரன்களும், அந்த இறுதி ஊர்வலத்தை ஒரு திருமண விழாவையே மிஞ்சும் அளவுக்கு மாற்றிக் காட்டினர். வெறும் 24 மணி நேரத்தில் 700-க்கும் மேற்பட்ட வாகனங்களை வரவழைத்து, 3500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க, டிரோன் கேமராக்கள் மூலம் ஒட்டுமொத்த நிகழ்வையும் பதிவு செய்தனர்.

ஊர்வலத்தில் ‘லவுண்டா டான்ஸ்’ எனும் பாரம்பரிய நடனமும் ஆக்கப்பட்டது. வீட்டின் மொட்டை மாடிகளில் நின்றுகொண்டு மக்கள் இந்த வினோத ஊர்வலத்தைப் பார்த்தனர்.

நிலக்கரி மற்றும் குளிர்பானத் தொழில் செய்து வரும் பேரன்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மறைந்த தனது பாட்டிக்காக லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து செய்த இந்தச் செயல், இப்போது இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.