மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியா தனது எல்பிஜி இறக்குமதி முறையில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. வழக்கமாக சவுதி அரேபியா, கத்தார் போன்ற வளைகுடா நாடுகளையே பெரிதும் நம்பியிருந்த இந்தியா, தற்போது அமெரிக்கா, ரஷ்யா, நார்வே மற்றும் கனடா போன்ற நாடுகளிடம் இருந்து அதிகப்படியான எரிவாயுவை வாங்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, நீண்ட கால ஒப்பந்தங்களை மட்டும் நம்பியிருக்காமல், உடனடித் தேவைக்காக ‘ஸ்பாட் மார்க்கெட்’ மூலம் கூடுதல் எரிவாயுவை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல் செய்து வருகின்றன.
இதன் மூலம் சர்வதேசப் பதற்றங்களுக்கு மத்தியிலும் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவின் ஒரு நாள் எல்பிஜி நுகர்வு சுமார் 80,000 டன்களாக உள்ளது. இறக்குமதி மீதான சுமையைக் குறைக்க, உள்நாட்டு எரிவாயு உற்பத்தியை 20% அதிகரித்து தினமும் 46,000 டன்களாக அரசு உயர்த்தியுள்ளது.
மீதமுள்ள தேவையைப் பல நாடுகளிடம் இருந்து பகிர்ந்து வாங்குவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் போர் ஏற்பட்டாலும் இந்தியாவிற்கு வரும் சப்ளை பாதிக்கப்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் சர்வதேச அளவில் எரிசக்தி சந்தையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், இந்திய நுகர்வோருக்குத் தங்குதடையின்றி சிலிண்டர்கள் கிடைக்கும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
