மனிதர்களின் போதைப் பழக்கம் இப்போது மனித சமூகத்தை மட்டும் சிதைக்கவில்லை, அமைதியாக ஆற்றில் நீந்தும் மீன்களையும் விட்டுவைக்கவில்லை. ஸ்வீடன் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், ஆறுகள் மற்றும் ஏரிகளில் கலக்கும் போதை மருந்துகளின் எஞ்சிய கழிவுகள் மீன்களை “போதைக்கு அடிமையாக்குவது” கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சால்மன் ரக மீன்கள் இந்தக் கழிவுகளால் பாதிக்கப்பட்டு, வழக்கத்திற்கு மாறான சுறுசுறுப்புடனும், அசுர வேகத்துடனும் நீந்துவது தெரியவந்துள்ளது.
சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஜாக் பிராண்ட் நடத்திய இந்த சோதனையில், தண்ணீரில் கலக்கும் மிகச்சிறிய அளவிலான கோகோயின் மற்றும் இதர மருந்து கழிவுகள் மீன்களின் மூளையை நேரடியாகப் பாதிக்கின்றன. இதனால் மீன்கள் எப்போதும் “ஹை” (High) நிலையில் இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தில் இருக்கின்றன.
இந்த அதிகப்படியான செயல்பாடு மீன்களின் ஆற்றலை விரைவாகத் தீர்ப்பதுடன், அவை வேட்டை விலங்குகளிடம் எளிதில் சிக்கவும் காரணமாகிறது. நாம் பயன்படுத்தும் பெயின் கில்லர்கள், ஆன்டி-ஏஞ்சைட்டி மாத்திரைகளின் கழிவுகளும் தண்ணீரில் கலப்பதால், ஒட்டுமொத்த நீர்வாழ் உலகமே இப்போது ஆபத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
