உலகமே டிஜிட்டல் மயமாகி வரும் வேளையில், ஐடி துறையில் நிலவும் இந்தப் பணிநீக்கப் படலம் ஊழியர்களை நிலைகுலையச் செய்துள்ளது. மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்து வருகின்றன. இதன் விளைவாக, சுமார் 23,000 ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மெட்டா நிறுவனம் தனது 10 சதவீத ஊழியர்களை, அதாவது சுமார் 8,000 பேரை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. மே 20 முதல் இந்தப் பணிநீக்க நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் எனத் தெரிகிறது.

​”எங்கள் இலக்கு இனி ஏஐ (AI) சார்ந்து இயங்குவதுதான்” என்று மெட்டா கூறினாலும், 6,000 காலியிடங்களை இனி நிரப்பவே மாட்டோம் என்ற முடிவு இளைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது 1.25 லட்சம் ஊழியர்களில் சுமார் 8,750 பேருக்கு ‘விருப்ப ஓய்வு’ திட்டத்தை அறிவித்துள்ளது. நேரடியாகத் தூக்காவிட்டாலும், இது ஒரு மறைமுகமான பணிநீக்க நடவடிக்கை தான் என நிபுணர்கள் கருதுகின்றனர். மெஷின்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனித உழைப்பிற்குத் தரவில்லையா என்ற கேள்வி இப்போது டெக் உலகில் தீயாய் பரவி வருகிறது.