கான்பூர் கல்யாண்பூர் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர், பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த போலீசாருக்கு, 19 வயதே ஆன ஆரியன் சர்மா என்ற இளைஞன் சிக்கியது பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. அந்த இளைஞன் சாதாரணமாக வரவில்லை; “உங்கள் வீட்டு மொட்டை மாடியில் என்னுடைய ட்ரோன் (Drone) விழுந்துவிட்டது” என்று பொய் சொல்லித் தான் வீட்டிற்குள் நுழைந்துள்ளான்.
மூதாட்டி தனியாக இருப்பதை உறுதி செய்துகொண்ட ஆரியன், துணியால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளான். இந்தத் திட்டத்திற்காக ஆரியன் மூன்று நாட்களாக அந்த வீட்டை நோட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, கொலை நடந்த அதே பகுதியில் சுமார் 8 ஆண்டுகள் ஆரியன் வாடகைக்கு வசித்துள்ளான்.
இதனால் வீட்டின் அமைப்பு மற்றும் தப்பிச் செல்லும் வழிகள் அவனுக்கு அத்துப்படியாக இருந்துள்ளது. அவனிடமிருந்து சுமார் 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான 153 கிராம் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். “ட்ரோன் விழுந்துவிட்டது” என்று கூறி நடந்த இந்த நூதனக் கொலைச் சம்பவம், வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
