ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தூண்களாகக் கருதப்பட்ட ராகவ் சதா, ஸ்வாதி மாலிவால் மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் கூண்டோடு பாஜகவில் இணைந்திருப்பது இந்திய அரசியலில் பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, “தவறான கட்சியில் இருந்த சரியான நபர் நான்” என்று கூறி வெளியேறிய ராகவ் சதா, இந்த அதிரடி முடிவால் இன்ஸ்டாகிராமில் ஒரே நாளில் 14 லட்சம் பின்தொடர்பாளர்களை இழந்து இளைஞர்களின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார். கெஜ்ரிவால் பெண்களுக்கு எதிரானவர் என்றும், பஞ்சாப் அரசு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுவதாகவும் ஸ்வாதி மாலிவால் முன்வைத்துள்ள பகீர் குற்றச்சாட்டுகள் ஆம் ஆத்மிக்கு பலத்த அடியைக் கொடுத்துள்ளன.

இதற்கிடையே, கட்சி மாறிய 7 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் மாநிலங்களவைத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ள நிலையில், பாஜகவின் “சலவை இயந்திரம்” மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
