அதிமுகவில் மீண்டும் தலைமை மாற்றம் குறித்த விவாதம் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், முன்னாள் எம்பி கே.சி. பழனிச்சாமி வெளியிட்டுள்ள அதிரடி கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
“ஒருவேளை அதிமுக ஆட்சியைப் பிடிக்கத் தவறினால், கட்சியில் தலைமை மாற்றம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே சமயம், அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் எடப்பாடி பழனிசாமி (EPS) யாராலும் அசைக்க முடியாத நிகரற்ற தலைவராக உருவெடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரக் களத்தில் மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதை விட்டுவிட்டு, எடப்பாடி பழனிசாமி உட்கட்சிப் பூசல்களையே அதிகம் பேசியதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், “தேர்தல் முடிவுகள் எடப்பாடியாரைக் கோட்டைக்கு அனுப்புமா? அல்லது தெருக்கோடியில் நிறுத்துமா? என்பது மே 4-ம் தேதி தெரிந்துவிடும்” என அதிரடியாகப் பேசியுள்ளது அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை உருவாக்கியுள்ளது.
