“தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகத்தின் கீழ் இயங்கும் உடுமலைப்பேட்டை மரபுசாரா மின்சாரப் பிரிவு அலுவலகத்தில், புதிய சூரியசக்தி மற்றும் காற்றாலை மின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க முறைகேடாகப் பணம் வசூலித்த புகாரில் மேற்பார்வை பொறியாளர் பிரசாத் மற்றும் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவர் அதிரடியாக ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள இப்பசுமை எரிசக்தி கழகத்திற்குத் திருப்பூர் மற்றும் உடுமலைப்பேட்டையில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
அங்குள்ள உடுமலைப்பேட்டை மரபுசாரா பிரிவில் புதிய மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்க லஞ்சம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்கள் அடிப்படையில் மின்வாரிய உயர் அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையின் தொடர்ச்சியாக, முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மேற்பார்வை பொறியாளர் பிரசாத், செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையும் தற்காலிகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மின் வாரியம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.”
