ஐபிஎல் 2026 தொடரில் அதிரடியாக விளையாடி ஆரஞ்சு தொப்பியை (Orange Cap) வென்ற 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவ்வளவு சிறிய வயதில் அவர் பெரிய சிக்ஸர்களை விளாசுவதால், அவரது உண்மையான வயது குறித்துப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், வைபவ்வின் வயது குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு அவரது பயிற்சியாளர் மனிஷ் ஓஜா ஏஎன்ஐ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

விளையாட்டைப் பொறுத்தவரை வயது முக்கியமல்ல என்றும், வைபவ்வின் அசாத்திய திறமை மற்றும் ஆட்டத்திறனை மட்டுமே அடிப்படையாக வைத்து அவரை மதிப்பிட வேண்டும் என்றும் பயிற்சியாளர் மனிஷ் ஓஜா தெளிவாகக் கூறியுள்ளார்.

மேலும், வைபவ் சூர்யவன்ஷி எதிர்காலத்தில் இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகி விளையாடுவார் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, சிவப்பு பந்து கிரிக்கெட்டில்  வைபவ் பெரிய அளவில் சாதிப்பதைக் காண தான் ஆவலோடு இருப்பதாகப் பயிற்சியாளர் ஓஜா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.