தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அ.தி.மு.க. முன்னாள் பகுதிச் செயலாளரின் மகன் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் நேற்று  வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அப்போது, அ.தி.மு.க. முன்னாள் பகுதிச் செயலாளரின் மகனான சங்கர் என்பவர், வாக்குப்பதிவு நிலவரம் குறித்துக் கேட்டறிய அந்த வாக்குச்சாவடிக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள், திடீரென சங்கரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாகத் தாக்கினர். இந்தத் தாக்குதலில் அவரது தலை மற்றும் கைகளில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இருந்த சங்கர், உயிர் பிழைக்க அங்கிருந்து தப்பி பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்றார். அவரைப் பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்து, உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், வாக்குச்சாவடி அருகே ஒரு கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு அருகிலேயே நடந்த இந்த அரிவாள் வெட்டுச் சம்பவம், அப்பகுதி வாக்காளர்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.