மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் பிபிஓ மையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை மற்றும் மன ரீதியான துன்புறுத்தல் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ரஸா மேமன் மற்றும் ஷாருக் குரேஷி ஆகிய இருவர் மீது இதுவரை 9 பெண் ஊழியர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

அலுவலகத்திற்குள் ஒரு கும்பலாகச் செயல்பட்டு வரும் இவர்கள், பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆபாசமாகக் கேள்விகள் கேட்பது, உடல் அமைப்பு குறித்துக் கேலி செய்வது மற்றும் காதலிக்கச் சொல்லி வற்புறுத்துவது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பெண்கள், காவல்துறையை நாடியதை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஒரு பெண் தனது புகாரில், கடந்த ஜனவரி 2026 முதல் ஏப்ரல் வரை தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்துள்ளார். ஷாருக் குரேஷி மற்றும் ரஸா மேமன் ஆகியோர் அந்தப் பெண்ணின் குடும்பம் மற்றும் பழைய உறவுகள் குறித்துக் கேட்டு சங்கடப்படுத்தியதோடு, அவரது உடல் தோற்றம் குறித்து ஆபாசமாக விமர்சித்துள்ளனர்.

மேலும், பண்டிகை நாட்களில் அவர் பாரம்பரிய உடையில் வரும்போது தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பது மற்றும் வேலை முடிந்து வெளியே வரச் சொல்லித் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.

அலுவலகத்தில் இவர்களின் செல்வாக்கு அதிகமாக இருந்ததால் நீண்ட காலம் அமைதியாக இருந்ததாகக் கூறிய அந்தப் பெண், தற்போது துணிச்சலுடன் புகார் அளித்துள்ளார். இது குறித்து நாசிக் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.