மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில், மாணவர்கள் தாராளமாக செல்போன் மூலம் காப்பியடிக்க கல்லூரி நிர்வாகமே லஞ்சம் வாங்கியதாக எழுந்துள்ள புகார் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவிகுலகுரு காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட மூலில் உள்ள சர்வோதயா கல்லூரியில் ஏப்ரல் 22-ஆம் தேதி பி.ஏ. சிவில் சர்வீசஸ் (B.A. Civil Services) மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்றது. எதிர்காலத்தில் அரசு அதிகாரிகளாகப் பொறுப்பேற்க வேண்டிய மாணவர்கள், இந்தப் பாடத்திற்கான தேர்விலேயே செல்போன் உதவியுடன் கூகுளில் விடை தேடி எழுதியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு அறையில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றால், ஒவ்வொரு மாணவரும் ரூ.300 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் தரப்பில் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக மாணவர்கள் எந்தவித அச்சமுமின்றி தேர்வு அறையில் அமர்ந்து செல்போன்களைப் பயன்படுத்துவதும், தரையில் அமர்ந்து தேர்வு எழுதுவதும் போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
சுமார் 400 மாணவர்கள் தேர்வு எழுதிய இந்த மையத்தில், போதிய இருக்கை வசதிகள் கூட இல்லை என்பது அம்பலமாகியுள்ளது. ஒரே பெஞ்சில் மூன்று மாணவர்கள் நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். இடவசதி இல்லாததால் பலர் தரையில் அமர்ந்தே தேர்வு எழுதினர். மேலும், அடிப்படை கழிப்பறை வசதிகள் கூட அங்கு முறையாக இல்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Students Pay Rs 300 To Use Mobile Phones For Cheating During Exam In Maharashtra pic.twitter.com/LmOHSDVpNK
— NDTV (@ndtv) April 23, 2026
லஞ்சம் கொடுத்து குறுக்கு வழியில் தேர்ச்சி பெற விரும்பாத சில நேர்மையான மாணவர்கள், கல்லூரி வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். “நாங்கள் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் எங்களைப் புறக்கணித்துவிட்டு, பணம் கொடுத்தவர்களை செல்போன் பயன்படுத்த அனுமதித்தனர்” என்று அவர்கள் பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளனர். இவர்களின் போராட்டத்தாலேயே இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசின் ‘முறைகேடு இல்லாத தேர்வு’ என்ற முழக்கம், இந்தக் கல்லூரியில் அதிகாரிகளின் துணையோடு கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளதாகக் கல்வி ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
