மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா மாவட்டத்தில்  திருமணத்திற்கு மறுத்த சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பள்ளி அறையில் கட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  சுமித் தேவானந்த் உய்கே (21) என்ற இளைஞனும், அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பழகி வந்துள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன்பு அச்சிறுமியை மிரட்டி சுமித் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமியை வழிமறித்த சுமித், அவரைக் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளார். சிறுமியை ஒரு மாவட்ட ஊராட்சிப் பள்ளிக்கு கொண்டு சென்ற சுமித், “என்னைத் திருமணம் செய்துகொள், இல்லையென்றால் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று கூறி கட்டாயப்படுத்தியுள்ளார். சிறுமி அதற்குத் துணிச்சலாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், சிறுமியின் வாய், கைகள் மற்றும் கால்களைத் துணியால் கட்டி, அதே அறையில் அடைத்து வைத்துவிட்டுத் தப்பியோடிவிட்டார். மறுநாள் காலை பள்ளி திறக்கப்பட்டபோது, அறையில் சிறுமி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஆசிரியர்களும் மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியை மீட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில்,  போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளி சுமித் உய்கேவை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கல்வி கற்கும் பள்ளியிலேயே இத்தகைய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.