பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மீதான பிடியை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடியாக, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததுடன், ரவி நதிநீரின் மீதான தனது கட்டுப்பாட்டை இந்தியா 100 சதவீதம் உறுதி செய்துள்ளது.

பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் அந்த நாட்டுக்கு பெரும் வினையாக முடிந்துள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருதலைப்பட்சமாக நிறுத்தியது பாகிஸ்தானுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. இது குறித்து சர்வதேச அரங்கில் இந்தியா மீது அழுத்தம் கொடுக்க பாகிஸ்தான் முயன்ற போதிலும், சர்வதேச மேடைகளில் பாகிஸ்தானின் உண்மை முகத்தை இந்தியா அம்பலப்படுத்தி வருகிறது.

ரவி, சட்லஜ் மற்றும் பியாஸ் நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்த 20 சதவீத உபரி நீரையும் இந்தியா தற்போது முழுமையாகத் தடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் அரசு சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகளின் குறுக்கே புதிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானுக்குச் செல்லும் 80 சதவீத நீர் பெருமளவு குறையத் தொடங்கியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் எல்லையில் கட்டப்பட்டுள்ள ஷாபூர் கண்டி அணை  பணிகள் நிறைவடைந்த நிலையில், ரவி நதியின் நீர் இனி பாகிஸ்தான் செல்லாமல் சம்பா மற்றும் கதுவா பகுதிகளுக்குத் திருப்பப்பட உள்ளது.

ஒருபுறம் தண்ணீர் தட்டுப்பாடு தலைதூக்கியுள்ள நிலையில், மறுபுறம் பாகிஸ்தானின் பொருளாதார நிலை அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தான் வழங்கிய கடனைத் திருப்பித் தருமாறு பாகிஸ்தானைக் கேட்டுள்ளது. தங்கள் நாட்டிலேயே குடிக்கத் தண்ணீர் இன்றி தவிக்கும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரைத் தடுக்கப் போவதாக பாகிஸ்தான் நாடகமாடி வருகிறது. கையில் பிச்சை பாத்திரத்துடன் உலக நாடுகளிடம் சுற்றும் நிலைக்குப் பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆயுதம் ஏந்திப் போரிடுவதை விட, மூளையைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்குப் பாடம் புகட்டும் இந்தியாவின் இந்த ‘நீர் ராஜதந்திரம்’ அந்த நாட்டை நிலைகுலையச் செய்துள்ளது.