உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குரங்குகள் தொல்லையைச் சமாளிக்க ‘லங்கூர்’ (Langur) வகை குரங்கு ஒன்றை காவலாளியாகப் பணியமர்த்தியுள்ளது. அதற்கு மாதம் ரூ.12,000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அலிகாரில் உள்ள பிரபல பட்டப்படிப்பு கல்லூரியில் கடந்த சில மாதங்களாக குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வந்தது. வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்களின் புத்தகங்களைக் கிழிப்பது, உணவுகளைப் பறிப்பது மற்றும் பேராசிரியர்களை அச்சுறுத்துவது என குரங்குகள் பெரும் இடையூறாக இருந்து வந்தன. இதனால் கல்லூரி நிர்வாகம் கடும் அவதிக்குள்ளானது.

 

இந்தத் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க கல்லூரி நிர்வாகம் ஒரு நூதன முறையைக் கையாண்டது. குரங்குகளுக்குப் பயத்தைத் தரும் ‘லங்கூர்’ வகை குரங்கு ஒன்றை காவலாளியாக நியமிக்க முடிவு செய்தது. அதன்படி, ‘கோலு’ என்று பெயரிடப்பட்ட லங்கூர் குரங்கு தற்போது கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பிற்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளது.

இந்த லங்கூர் குரங்கைப் பராமரிப்பதற்கும், அதை வளாகத்தில் வலம் வரச் செய்வதற்கும் ஒரு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக கல்லூரி நிர்வாகம் மாதம் ரூ.12,000 ஊதியமாக வழங்குகிறது. “கோலு பணியில் சேர்ந்த பிறகு, மற்ற குரங்குகள் பயந்து ஓடிவிட்டன. இப்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவ்வித அச்சமும் இன்றி கல்லூரிக்கு வருகின்றனர்” என்று கல்லூரி நிர்வாகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வினோத வேலைவாய்ப்பு குறித்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.