உதய்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில், நோயாளி உயிரிழந்த ஆத்திரத்தில் அவரது கணவர் இரும்புத் தடியால் மருத்துவரைத் தாக்க முயன்ற சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜ்மீரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் ‘குய்லான்-பாரே சிண்ட்ரோம்’ (Guillain-Barré Syndrome) என்ற நரம்பியல் பாதிப்பு காரணமாக உதய்பூரில் உள்ள மகாராணா பூபால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முதல் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

திங்கட்கிழமை இரவு அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. மருத்துவர்கள் சிபிஆர்  சிகிச்சை அளித்து அவரை மீட்கப் போராடினர். இருப்பினும், நள்ளிரவு 12:30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

 

View this post on Instagram

 

A post shared by Dr Mohammad Momin Khan (@drmohammadmominkhan)

தனது மனைவி உயிரிழந்த செய்தியைக் கேட்ட அவரது கணவர் ஆத்திரமடைந்து கட்டுப்பாட்டை இழந்தார். அங்கிருந்த இரும்புத் தடி ஒன்றை எடுத்துக்கொண்டு, பணியில் இருந்த மருத்துவரைத் தாக்க முயன்றார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பதற்றமும், பீதியும் ஏற்பட்டது.

இந்தத் தாக்குதல் முயற்சி தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதில், ஆத்திரமடைந்த அந்த நபர் இரும்புத் தடியுடன் தாழ்வாரத்தில் மருத்துவரைத் துரத்திச் செல்வது பதிவாகியுள்ளது. தகவலறிந்த ரவீந்திரநாத் தாகூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ராகுல் ஜெயின் நள்ளிரவிலேயே மருத்துவமனைக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தார். மேலும் மருத்துவர்கள் மீதான இத்தகைய வன்முறைச் செயல்களுக்கு மருத்துவ சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.