உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் 5-வது மாடியில் இருந்து குதித்து பயிற்சி வழக்கறிஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்துள்ள 2 பக்க உருக்கமான கடிதம், சமூகத்தில் தந்தை – மகன் உறவு குறித்துப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கான்புர் நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தவர் பிரியான்ஷு ஸ்ரீவாஸ்தவா. இவர் நேற்று நீதிமன்றக் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது உடலை மீட்ட போலீசார், அவர் மறைத்து வைத்திருந்த இரண்டு பக்கத் தற்கொலை குறிப்பைக் கண்டெடுத்தனர். அதில், “யார் இந்தக் கடிதத்தைப் பார்த்தாலும் தயவுசெய்து கடைசி வரை படிக்கவும்” எனத் தனது கடைசி ஆசையாகக் குறிப்பிட்டிருந்தார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் தனது தந்தை ராஜேந்திர குமார் மீது கடுமையான புகார்களைச் சுமத்தியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, எனக்கு 6 வயது இருக்கும்போது, பிரிட்ஜில் இருந்த மேங்கோ ஷேக்கை (Mango Shake) அவருக்குத் தெரியாமல் குடித்ததற்காக, என் தந்தை என்னை ஆடைகளின்றி வீட்டை விட்டு வெளியே துரத்தினார். அந்த அவமானமும் பயமும் என் ஆழ்மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

 

படிப்புக்காக அழுத்தம் கொடுப்பது, சரியாகத் தயாராகவில்லை என்றால் அடிப்பது போன்றவற்றைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு நிமிடத்திற்கும் கணக்குக் கேட்பது, எப்போதும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது எனத் தந்தை கொடுத்த தொடர் மன உளைச்சலே இந்த முடிவுக்குக் காரணம் என அவர் எழுதியுள்ளார்.

இப்படி ஒரு தந்தை யாருக்கும் கிடைக்கக் கூடாது. என் தந்தை எனது உடலைத் தொடக்கூட அனுமதிக்கக் கூடாது. அப்பா… நீங்கள் இப்போது ஜெயித்துவிட்டீர்கள், உங்கள் வெற்றிக்கு வாழ்த்துகள் என விரக்தியின் விளிம்பில் அந்தக் கடிதத்தை முடித்துள்ளார் பிரியான்ஷு.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தந்தையின் கண்டிப்பு எல்லை மீறினால் அது ஒரு மகனின் உயிரையே பறிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் சாட்சியாக மாறியுள்ளது.