மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடாவில், இளம்பெண்களைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தி அவர்களது ஆபாச வீடியோக்களை இணையத்தில் வைரலாக்கிய விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அயன் அகமது என்பவனைப் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
சமூக வலைதளங்களில் தன்னை ஒரு மிகப்பெரிய ‘டான்’ போலக் காட்டிக்கொள்ள விரும்பிய அயன், அதற்காகத் தனது சொந்தத் தாயின் தங்கச் சங்கிலி மற்றும் லாக்கெட்டையே திருடி விற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமூக வலைதளங்களில் அயன் வெளியிட்ட ரீல்ஸ்கள் அப்படியே சினிமா வில்லன் பாணியில் இருந்துள்ளன. மேஜை மீது கட்டுக்கட்டாகப் பணம், 4 ஐபோன்கள், கையில் பிஸ்டல் மற்றும் விலை உயர்ந்த ‘தார்’ கார் என அவர் காட்டிய ஆடம்பரங்கள் அனைத்தும் திருட்டு மற்றும் மோசடிப் பணத்தில் உருவானவை.
“அவன் நிச்சயமாகப் பெரிய அளவில் எதாவது செய்வான், உயிரை விட அவனுக்கு வெற்றிதான் முக்கியம்” என்ற வாசகங்களுடன் அவர் வெளியிட்ட வீடியோக்கள் இப்போது போலீஸாரிடம் சிக்கியுள்ளது. அந்த பிஸ்டல் உண்மையானதா? அந்த தார் கார் யாருடையது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீஸார், ஆடம்பர மோகத்தால் பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த இந்த ‘சைக்கோ’ குற்றவாளியின் முழு கிரிமினல் ஜாதகத்தையும் தோண்டி எடுத்து வருகின்றனர்.
