பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்” என்பார்கள். ஆனால், ஹைதராபாத்தில் சமோசா விற்கும் நபர் ஒருவரின் செயலைப் பார்த்தால், உங்களுக்குப் பசி எடுப்பதே நின்றுவிடும். அந்தளவிற்கு சுகாதாரமற்ற முறையில் அவர் நடந்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் அன்றாடம் வினோதமான உணவு வீடியோக்கள் வெளியாவது வழக்கம். ஆனால், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வெளியாகியுள்ள 16 வினாடி ஓடக்கூடிய ஒரு வீடியோ, தெருவோர உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், சாலையோர சமோசா கடை வைத்திருக்கும் நபர் ஒருவர், வாடிக்கையாளருக்கு சமோசாவை எடுத்துக் கொடுப்பதற்கு முன்னால், யாரும் எதிர்பாராத விதமாகத் தனது கையைத் தனது பேண்டிற்குள் விடுகிறார். பின்னர், அதே கையைக் கழுவாமல் அப்படியே எடுத்து, சமோசாக்களைத் தொட்டுத் தட்டில் வைத்து வாடிக்கையாளருக்குப் பரிமாறுகிறார்.
இந்த வீடியோ ‘நடஷா’ (@natashaxtwts) என்ற எக்ஸ் தளப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. “எச்சரிக்கையாக இருங்கள்” என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்தச் சம்பவம் ஹைதராபாத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த இணையவாசிகள் தங்கள் குமுறல்களைக் கொட்டி வருகின்றனர். தெருவோர உணவுகளைத் தயவுசெய்து தவிருங்கள். இவர்களின் சமையலறைக்குள் சென்று பார்த்தால், வாழ்க்கையில் மீண்டும் வெளியே சாப்பிடவே மாட்டீர்கள் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றோருவர் இதைப் பார்த்தாலே வாந்தி வருகிறது. இவ்வளவு உண்மையைச் சொல்லியிருக்க வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.
சில நெட்டிசன்கள், இது அந்த வியாபாரியின் ‘ரகசிய மசாலா’ போலத் தெரிகிறது என நக்கலாகப் பதிவிட்டுள்ளனர். மேலும், அங்கிருந்த நபர் இதையெல்லாம் பார்த்தும் எப்படி உணவு ஆர்டர் செய்தார் என்றும், சுகாதாரத் துறை அதிகாரிகள் இதுபோன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
