உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூரில், பள்ளிக்குச் சென்ற மாணவிகளிடம் சாலையில் அநாகரீகமாக நடந்துகொண்ட இரு இளைஞர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் காவல் நிலையத்தில் கைகூப்பி மன்னிப்பு கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகப் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவிகளை அவர்கள் தொடர்ந்து பின்தொடர்ந்து கிண்டல் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில், ஒரு மாணவியின் கையைப் பிடித்து இழுத்து அந்த இளைஞர்கள் அநாகரீகமாக நடந்துகொண்டனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். இது குறித்து காவல்துறை அதிகாரி அபிமன்யு மங்லிக் கூறுகையில், சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவின் அடிப்படையில், மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்களைக் கண்டறிந்து கைது செய்துள்ளோம். அவர்கள் மீது போக்சோ ச ட்டம் மற்றும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் காவல் நிலையத்தில் கைகூப்பி மன்னிப்பு கேட்கும் மற்றொரு வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. அதில், “எங்களை மன்னித்துவிடுங்கள், இனிமேல் இது போன்ற தவறைச் செய்ய மாட்டோம்” என்று அவர்கள் கெஞ்சுவது பதிவாகியுள்ளது. மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸார் எச்சரித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.