உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் சந்தேகப் பேயால் ஒரு குடும்பமே சிதைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பகேடா கிராமத்தைச் சேர்ந்த முபின் ஷேக் (48) என்பவருக்கும், அவரது மனைவி சர்பியாவுக்கும் (52) இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.

மனைவியின் நடத்தையில் முபின் ஷேக் சந்தேகப்பட்டதால் ஏற்பட்ட வாக்குவாதம், ஒரு கட்டத்தில் விபரீதமாக மாறியது. ஆத்திரமடைந்த முபின், வீட்டில் இருந்த கோடரியால் தனது மனைவியை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார்.

வெளியே சென்றிருந்த இவர்களது மகள், கோச்சிங் கிளாஸ் முடிந்து வீட்டிற்குத் திரும்பியபோது, தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அலறினார்.

அவரது சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடுவதற்குள் முபின் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முபினைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அருகில் உள்ள காட்டுப்பகுதியில் அவர் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

மனைவியைக் கொன்ற குற்ற உணர்வால் அல்லது போலீசாருக்குப் பயந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. சந்தேகத்தால் ஒரே நாளில் தாய், தந்தை இருவரையும் இழந்து தவிக்கும் அந்தப் பெண்ணின் நிலை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.