குளிர்ச்சியான தட்பவெப்ப நிலைக்குப் பெயர்போன பெங்களூரு நகரம், தற்போது வரலாறு காணாத கோடை வெயிலில் தகித்து வருகிறது.

இந்தத் தகிப்பைத் தாங்க முடியாமல் பெங்களூருவைச் சேர்ந்த பிரியா பால் என்ற பெண் செய்த காரியம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

தனது வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் ஒரு ஹோட்டலில், ஒருநாள் தங்குவதற்காக அவர் அறை எடுத்துள்ளார். எதற்காகத் தெரியுமா? ஹோட்டலில் இருக்கும் ஏசி (AC) வசதிக்காக மட்டுமே.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “வீட்டில் வெயில் கொடுமை தாங்கவில்லை. ஏசி அல்லது கூலர் வாங்கலாம் என்று பார்த்தால், எங்குமே ஸ்டாக் இல்லை;

டெலிவரி செய்ய ஒரு வாரம் ஆகும் என்கிறார்கள். வாடகைக்குக் கூட கிடைக்கவில்லை. அதனால் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் நிம்மதியாக ஏசியில் அமர்ந்து நெட்ஃபிக்ஸ் பார்த்து நேரத்தைக் கழிக்க ஹோட்டலில் அறை எடுத்தோம்” என்று கூறியுள்ளார்.

“ஏசி இல்லாமல் இனி வாழவே முடியாது” என்ற கேப்ஷனுடன் அவர் பதிவிட்ட இந்த வீடியோ, “வெயிலைச் சமாளிக்க இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே” எனப் பலரையும் கவர்ந்துள்ளது.

ஏசி மற்றும் கூலர்களுக்குத் தட்டுப்பாடு நிலவும் சூழலில், இந்த பெங்களூரு பெண்ணின் ‘ஐடியா’ ஸ்மார்ட் ஹேக் என நெட்டிசன்களால் பாராட்டப்பட்டு வருகிறது.