வெறும் ஒரு லாலிபாப் மிட்டாய்க்காக அக்காவுக்கும் தம்பிக்கும் இடையே ஏற்பட்ட சண்டை, ஒரு உயிரைப் பறித்ததோடு அந்த குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் இந்த விபரீதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 11 வயதான ஆரியன் மற்றும் அவனது 15 வயது அக்கா இருவரும் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஒரு லாலிபாப் மிட்டாயை யார் எடுப்பது என்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறு பிள்ளைகளுக்கு இடையே ஏற்படும் சாதாரண சண்டை என நினைத்த நிலையில், அது மோதலாக மாறியது.
இந்த மல்லுக்கட்டலில் ஆரியனின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, அவன் அந்த இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான். தம்பி இறந்துவிட்டதைக் கண்டு அதிர்ச்சியும் பயமும் அடைந்த அந்தச் சிறுமி, தற்கொலை செய்துகொண்டது போலக் காட்ட அவனது உடலைத் தூக்கில் தொங்கவிட்டுள்ளார்.
ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுவன் தூக்கில் தொங்குவதற்கு முன்பே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மகனை இழந்த தந்தை கொடுத்த புகாரின் பேரில், போலீசார் 15 வயது சிறுமி மீது வழக்குப் பதிவு செய்து அவரைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். ஒரு பக்கம் மகன் பலி, மறுபக்கம் மகள் கைது என அந்தப் பெற்றோர் கதறும் காட்சி பார்ப்போரை நிலைகுலையச் செய்துள்ளது.
