திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது இந்த கொடூரச் செயலுக்கு ஆளாகியுள்ளார்.
மேலும் இச்சம்பவத்தைக் கண்டித்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது வேதனைக்குரியது என்றும் அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீதோ அல்லது காவல்துறை மீதோ எவ்வித அச்சமும் இல்லை என்றும் அண்ணாமலை சாடியுள்ளார்.
இந்தச் சூழலிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க நீண்ட காலம் தேவைப்படும் எனக் குறிப்பிட்ட அவர், இக்குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரியப் பாதுகாப்பு மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
