சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று (ஏப். 21) மாலை 6 மணியுடன் நிறைவடைவதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது என்று உத்தரவிட்டுள்ள ஆணையம், விதிகளை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம், அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் மின்னணு ஊடகங்களுக்கும் பொருந்தும். தொலைக்காட்சி, வானொலி, வாட்ஸ்அப், குறுஞ்செய்தி மற்றும் இணையதளம் என எதன் மூலமாகவும் தேர்தல் தொடர்பான செய்திகளையோ, பரப்புரைகளையோ மேற்கொள்ளக் கூடாது. அதேபோல், திரையரங்குகள், இசை நிகழ்ச்சிகள் அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எதிலும் மறைமுகமாகக்கூட வாக்கு சேகரிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
