கடந்த 2024 மக்களவைத் தேர்தலின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை விரைவு ரயிலில் இருந்து ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக இன்று தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த பணம் வாக்காளர்களுக்குக் கொடுக்கக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறி, அமலாக்கத்துறை (ED) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

​இன்று இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு, நயினார் நாகேந்திரன் மற்றும் கேசவ விநாயகம் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், இதில் மேல் நடவடிக்கை தேவையில்லை என நீதிமன்றம் கருதியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு இந்தத் தீர்ப்பு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.