தூத்துக்குடியை சேர்ந்த ரேவதிக்கும், சுரேஷ்குமார் என்பவருக்கும் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், கடந்த ஓராண்டாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ரேவதி தனது 10 மாதக் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் பெட்ரோல் பாட்டிலுடன் ரேவதியின் வீட்டிற்குச் சென்று, அங்கு இருந்த ரேவதி, அவரது தாய் மற்றும் பச்சிளம் குழந்தை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றார்.

சுரேஷ்குமார் தீ வைக்க முயன்றபோது, ரேவதியும் அவரது தாயும் சாமர்த்தியமாக வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு, குழந்தையுடன் பின்புற வாசல் வழியாகத் தப்பி ஓடி உயிர் பிழைத்தனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், வீட்டின் முன் நின்றிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களுக்குத் தீ வைத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார், கொலை முயற்சியில் ஈடுபட்ட சுரேஷ்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் மனைவியையும் குழந்தையையும் எரிக்க முயன்ற இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.