உத்தரகாண்ட் மாநிலம் நைனிடூர் மாவட்டம் சட்டோலி கிராமத்தில், உள்ளூர் சிறுமிகளை கிண்டல் செய்ததாகக் கூறப்படும் இரண்டு வாலிபர்களை கிராம மக்கள் தாங்களே தண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த அந்த இருவரும், காரில் சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற சிறுமிகளிடம் அநாகரிகமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த கிராம மக்களும், சம்பந்தப்பட்ட பெண்களும் உடனடியாக ஒன்று சேர்ந்து அந்த வாலிபர்களின் வாகனத்தை மடக்கிப் பிடித்து அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
பொதுமக்கள் சூழ்ந்து கொள்ள, அந்த இரண்டு வாலிபர்களின் முகத்திலும் கரியைப் பூசி, செருப்புகளால் அடித்து தங்களின் ஆவேசத்தை வெளிப்படுத்தினர். அதுமட்டுமின்றி, இமயமலைப் பகுதியில் இயற்கையாக விளையக்கூடியதும், உடலில் பட்டால் கடுமையான எரிச்சலையும் அரிப்பையும் உண்டாக்கக் கூடியதுமான ‘பிச்சு பூட்டி’ எனப்படும் காட்டுத் தேமல் செடியை வைத்து அவர்களைத் தேய்த்தனர். இதனால் அந்த வாலிபர்கள் வலியால் துடித்தனர். இந்தச் சலசலப்புக்குப் பிறகு, அந்த இருவரையும் கிராம மக்கள் பிடித்து உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Two men harassed a girl in Satauli village, Uttarakhand.
Faces of both men were blackened using natural charcoal and were given further ayurvedic treatment using a plant called Bichhu Booti or Stinging Nettle.
This plant has the potential to cure hawasi nature for weeks… pic.twitter.com/WC1opNqclH
— Incognito (@Incognito_qfs) August 1, 2026
சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வைரலாகப் பரவி வருவதோடு, நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்காக கிராம மக்கள் எடுத்த இந்த அதிரடி முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர். “பெண்களுக்கு எதிரான இதுபோன்ற அத்துமீறல்களுக்கு இதுதான் சரியான தண்டனை” என்றும், “இது போன்ற குற்றங்களைச் செய்பவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையும்” என்றும் பலரும் தங்களது ஆதரவுக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுப்பது சரியல்ல என்றும் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். எது எப்படியோ, இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், காவல்துறையினர் இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
