அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வெடித்துள்ள போர், உலக நாடுகளுக்குப் பெரும் பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையிலும் அதிரடி மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ஐக்கிய அரபு அமீரகத்திற்கான பாகிஸ்தான் தூதர் ஃபைசல் நியாஸ் திர்மிஸி, இந்தியாவைப் புகழ்ந்து பேசியிருப்பது சர்வதேச அரங்கில் கவனத்தைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, அணுசக்தி பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரு சிறந்த வரலாறு இருப்பதாகவும், இரு நாடுகளும் ஒருபோதும் ஒருவரது அணுசக்தி நிலையங்கள் மீது மற்றவர் தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்பதற்கு 100% உத்தரவாதம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவை மேம்படுத்த ரஷியா நடுநிலையாளராகச் செயல்பட வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரில் மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முயன்றாலும், முதல் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் இந்தியாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்த பாகிஸ்தான், தற்போது அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரின் கோர முகத்தைக் கண்டு, போர் என்பது யாருக்கும் தீர்வல்ல என்பதை உணர்ந்து இந்தியாவின் அணுசக்திப் பாதுகாப்புக் கொள்கையைப் பாராட்டியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.