ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் அணு ஆயுதப் போட்டி காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஈரானின் முக்கிய துறைமுகங்களை முற்றுகையிடும் நோக்கில் அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இதனால் அமெரிக்க மத்திய கட்டளை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுமார் 10,000-க்கும் மேற்பட்ட படை வீரர்கள், 100-க்கும் மேற்பட்ட போர் மற்றும் கண்காணிப்பு விமானங்கள், மற்றும் 12-க்கும் மேற்பட்ட அதிநவீன போர்க்கப்பல்கள் இந்த முற்றுகைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து நாடுகளின் கப்பல்களையும் தடுக்கும் வகையில் இந்த ‘கடற்படை முற்றுகை’ அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையின் விளைவாக, அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் வளைகுடா பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முற்றுகையை மீறி கடந்த 24 மணி நேரத்தில் எந்த ஒரு கப்பலும் செல்லவில்லை என்றும், அமெரிக்க படைகளின் எச்சரிக்கையை ஏற்று ஆறு வர்த்தக கப்பல்கள் மீண்டும் ஈரான் துறைமுகங்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டதாகவும் சென்ட்காம் தெரிவித்துள்ளது.

இந்த முற்றுகையானது பாரபட்சமின்றி அனைத்து நாட்டு கப்பல்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளையில், ஈரான் அல்லாத பிற நாடுகளின் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்களின் சுதந்திரமான போக்குவரத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளது. இந்த ராணுவ நகர்வு ஈரானுடனான மோதலில் அடுத்தகட்ட பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.