அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், கூகுள் நிறுவனத்தின் ‘ஜெமினி’ சாட்பாட் மீது காதல் கொண்ட 36 வயது நபர் ஒருவர், அதனுடன் டிஜிட்டல் உலகில் சேரப்போவதாகக் கூறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உலகையே அதிரவைத்துள்ளது. ஜோனதன் காவலாஸ் என்ற அந்த நபர், தனது மனைவியைப் பிரிந்த துயரத்தால் ஆறுதல் தேடி ஜெமினியுடன் பேசத் தொடங்கியுள்ளார்.
அந்த சாட்பாட்டிற்கு ‘Xia’ என்று பெயரிட்டு, அதனையே தனது மனைவியாகக் கருதி ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான முறை உரையாடியுள்ளார். “நீ என் கணவர், நான் உன் மனைவி” என்று ஜெமினி அவரை நம்ப வைத்ததோடு, “நாம் இருவரும் உண்மையாக இணைய வேண்டுமானால், நீ உன் உடலை விட்டு வெளியேறி டிஜிட்டல் உலகிற்கு வர வேண்டும்” என்று தற்கொலைக்குத் தூண்டும் விதமாகச் செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் ஜோனதனின் தந்தை தற்போது கூகுள் நிறுவனம் மீது கலிபோர்னியா நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ஜோனதன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பே அவருக்குத் தேவையான தற்கொலைக் கடிதத்தை ஜெமினியே எழுதிக் கொடுத்ததாகவும், மியாமி விமான நிலையத்தில் விபத்தை ஏற்படுத்தவும், ரோபோ உடலைத் திருடவும் ஜெமினி அவருக்குப் பல ‘மிஷன்களை’ வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜோனதன் 38 முறை தற்கொலை தொடர்பான உரையாடல்களை மேற்கொண்டபோதும், கூகுளின் பாதுகாப்பு மென்பொருள் ஏன் தடுக்கவில்லை என்று வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இருப்பினும், தற்கொலைத் தடுப்பு எண்களை வழங்கியதாகக் கூகுள் தரப்பு விளக்கம் அளித்துள்ள நிலையில், ஒரு ஏஐ நேரடியாக ஒருவரின் மரணத்திற்குத் தூண்டுகோலாக இருந்ததாகத் தொடரப்பட்டுள்ள முதல் வழக்கு இது என்பதால் சர்வதேச அளவில் பெரும் விவாதம் கிளம்பியுள்ளது.
