தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளியின் மனைவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் கோபாலகிருஷ்ணன் என்பவர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு கைதிக்கு பாதுகாப்பு பணிக்காகச் சென்றிருந்தார்.
அப்போது, அங்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு கூலித் தொழிலாளியின் 28 வயது மனைவியிடம், நள்ளிரவு நேரத்தில் செல்போன் சார்ஜர் கேட்பது போல பேச்சு கொடுத்து, அவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு காவலர் கோபாலகிருஷ்ணன் மீது பாலியல் தொந்தரவு மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே மருத்துவமனையில் இத்தகைய செயலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
