ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே, தந்தை திட்டியதால் மனமுடைந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குருவரெட்டியூரைச் சேர்ந்த வீராசாமி என்பவரது மகள் மவுனிகா, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். சம்பவத்தன்று மதியம் வீட்டில் அனைவரும் பேசிக்கொண்டிருந்தபோது, வீராசாமி தனது முதுகைச் சொரிந்துவிடுமாறு மவுனிகாவிடம் கேட்டுள்ளார்.
அப்போது மவுனிகா தந்தையின் முதுகில் ஓங்கி அடித்ததால், ஆத்திரமடைந்த வீராசாமி அவரைச் சத்தமிட்டுத் திட்டியதாகக் கூறப்படுகிறது. தந்தை திட்டியதை சற்றும் எதிர்பாராத மாணவி, மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி அறைக்குள் சென்று கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது மாணவி தூக்கிட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அலறினர்.
இந்நிலையில் உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
